புத்தகம் கைக்கு கிடைத்த அன்றும் அடுத்த நாளுமாக இரண்டே அமர்வுகளில் வாசித்து முடித்தேன். வாசிப்பு குறித்த புத்தகங்களும் அரட்டைகளும் வாசிப்பை மேலும் இனியவையாக ஆக்குகின்றன. அணிந்துரையில் செல்வேந்திரன் கூறியது போல நமக்கு வாசிப்பை குறித்து புத்தகங்கள் குறித்து நிறைய நூல்கள் தமிழில் வேண்டும். ஆர். அபிலாஷின் "எப்படி வாசிக்க வேண்டும்" என்ற நூல் இப்போது தான் வாசித்து முடித்திருந்தேன். அதற்கு அடுத்து இந்த நூல்.
ஒரு திறந்த வெளி பள்ளி வகுப்பு. அருகே பெரிய மரம் ஒன்றின் பட்டைகளில் இருந்து பூச்சிகள் தங்கள் உலகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன. வகுப்புத் தோழிகள் என்னைச் சுற்றி தெரிக்கின்றனர். ஆசிரியர் மேசைக்கு நண்பன் ஒருவன் அழைக்கப்படுகிறான். தேர்வுதாள் போன்ற ஒன்றை திருத்துகிறார் ஆசிரியர். தாளில் இருப்பது அவனுடைய ஒரு நாளின் அன்றாடச் செயல்கள் நேர அளவுகளுடன் எழுத்தப்பட்டிருந்தன. வாசிப்புக்கான நேரம் எப்பொழுது எவ்வளவு என்று ஆசிரியர் ஆய்ந்து உறுதி செய்கிறார். இப்படி ஒரு இனிய கனவு ஒன்று கண்டேன். என் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு அழகான வகுப்பறை எனக்கு வாய்த்ததாக நினைவு இல்லை. கனவில் இருந்து நள்ளிரவில் எழுந்திருந்தேன் சந்தேகமே இல்லை அந்த ஆசிரியரின் முகம் சாந்தகுமார் அவர்களுடையதே தான். வேடிக்கையாக தோன்றினாலும் என்னில் நிகழ்ந்த இந்த நூலின் இனிய பாதிப்பு இது.
நூலாசிரியாரின் சிறுவயது கால வாசிப்பு அனுபவங்கள், மன்னார்குடியைச் சுற்றியுள்ள நூலகங்கள் , வேலைக்கான தினசரி பயணத்தில் வாசிப்பு என்று நல்ல வாசகராக உருவாகிவிட்டார் முதல் அத்யாயத்தில். ஒரு அறிவியக்கமாகவே இயங்கிய இடதுசாரி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டக நூலாசிரியாரின் தந்தை பற்றிய குறிப்பு வாசிக்கும்போது மரியாதை உணர்வு மேலோங்கியது.
பல ஆங்கில நூல் பெயர்களும் , osho நூல்கள் குறித்த சுட்டிகளும் என்று பல தகவல்களை குறித்துக்கொண்டேன். நூலாசிரியர் எதிலும் தீவிரத்துடன் இறங்கி பணியாற்றும் இயல்புடையவர் என்று தோன்றியது. முக்கிய பொறுப்புகள் வகித்தபொழுதும் வாசிக்கும் பழக்கத்தை விட்டு விடாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்திருக்கிறார். அலுவல் பணிகள் , குடும்ப பொறுப்புகள் , உடல் உபாதைகள் என்று ஓடிக்கொண்டே இருந்தாலும் வாசிப்பால் வாழ்க்கையை அழகாக்கி கொண்டிருக்கிறார். "நாய்க்கு வேலை இல்லை உட்கார நேரமில்லை" என்ற நான் அதிகம் உபயோகிக்கும் எனக்கு பிடித்த சொலவடையை நேர நிர்வாகத்திற்கு சரியாக எடுத்தாண்டிருந்தார்.
பேத்தி வளர்ப்பு வாசிக்கும் போது எனக்கு என் மகன் வளர்ப்பு தொடர்ந்து நினைவில் வந்துகொண்டிருந்தது. நான் குழந்தைகளுக்கான வாடகை நூலகத்தில் இருந்தும் , நான் வாங்கிய குழந்தைகள் தமிழ் புத்தகங்கள் இதழ்கள் கொண்டும் நாங்கள் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். முடியாத பட்சத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் podcastகளும் சேர்ந்து கேட்போம். அவனின் சொல்வளம் மீது எனக்கும் பெருமிதம் கொள்வேன். காணொளி முடிந்தவரை தவிர்த்துவிடுவோம் . அவனின் screen timeஐ தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே வருவாதால் இப்போது நன்றாக குறைந்து விட்டது. நூலாசிரியர் பரிசோதித்த role play போன்றவற்றை முயற்சிக்க வேண்டும். கொஞ்சம் சிரமம் தான் வறண்ட ஊற்றில் இருந்து கற்பனை நீரை எடுக்க :)
பனிச்சுமை , குடும்ப பொறுப்பு என்று எந்த தட்டிக்கழித்தலும் இல்லாமல் வாசிப்புக்கும் தேடலுக்கும் கொஞ்சம் இடம் கொடுத்து சம நிலை பேண வேண்டிய அவசியம் தெளிவாகத் தெரிகிறது இந்த நூலை வாசித்து முடித்த போது. சாந்தகுமார் என்ற பெயர் ஜெயமோகன் தளத்தின் வழி தெரிந்திருந்தேன் முன்பே, இந்நூல் அவரை அணுக்கமாக்கிவிட்டது
Comments
Post a Comment