இத்தளத்தை பற்றி

இவ்வலைப்பதிவுகள் வழியாக நான் வாசித்தவற்றை எழுதவும் சக வாசகர்களிடம் உரையாடவும் உத்தேசம்.  நல்ல வாசகனாக(Critical Reader) ஆகுவதற்கான பயனத்தில் ஒரு படியாக இது அமையட்டும்.

 சிறுவயதில் கிடைக்கும் பத்திரிக்கைகளில் படக்கதைகளும் , ஆச்சரியமூட்டும் அறிவியல் துணுக்குச் செய்திகளுமாக வாசிப்பு தொடங்கியது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது தூத்துக்குடி  பழைய தந்தி ஆபிஸ் அருகே பொது நூலகத்தில் சேர்ந்து அறிவியல் துணுக்குகள் அடங்கிய புத்தகமொன்றும், மகசூலை பெருக்குவது பற்றிய புத்தகமொன்றும் எடுத்து வந்துருந்தேன். என் அப்பா "இத ஏன்ல எடுத்துட்டு வந்திருக்க " என்று என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த கோமாளித்தனங்களை இன்றும் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

நல்ல வாசகனாகும் என் முயற்சியும் கோமாளித்தனமாக வாய்ப்பிருக்கிறது 😟

பின் தூத்துக்குடி துறைமுக கிளை நூலகத்தில் சேர்ந்தேன். சூற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்புகள்,  அறிவியல் கட்டுரைத் தொகுப்புகள் என்று படித்துக் கொண்டிருந்த நான் திருநெல்வேலி சூரியன் பண்பலை தொகுப்பாளர் நேயர் ஒருவரிடம் தங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார் என்று வினவினார்.  அப்போதுதான் எழுத்தாளர் என்று ஒருத்தர் இருக்கார் அல்லவா என்று மண்டையில் உரைத்தது. அக்கேள்வியை எனக்கு கேட்டுக்கொண்டேன். பிடித்தவர் என்றில்லை எழுத்தாளர் என்று பாடநூல் வழியாக மு.வ ஒருவரே நினைவில் துழாவியதில் கிடைத்தார்.

நூலகத்தில் அவருடைய சமூக புதினமொன்றும் 2001 என்ற புதினம் ஒன்றையும் வாசித்தேன். பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. புனைவுகள் பக்கம் அதன் பின் போகவில்லை.

எல்லாத் தமிழர்களைப் போல எனக்கும் தமிழ் பெருமிதங்கள் பற்றிய ஆர்வம் எழுந்தது. பாவாணர் நூல்களுக்கு இட்டுச்சென்றது. என்னை பாதித்த எழுத்துகளில் பாவாணரும் ஒருவர்.

வெங்கட்ரமணன் என்பவர் எழுதிய "குவாண்டம் கணினி: அறிவியல் கட்டுரைகள்" நூல் வழியாக திண்ணை இனைய இதழை கண்டடைந்தேன் கல்லூரி இரண்டாமாண்டில். பின் 2011ல் அழகி திரைபடத்தை பற்றிய ஜெயமோகனின்  திண்ணைக் கட்டுரையை படித்தேன். எனக்கு அறிவுலக வாசல் திறந்தது. ஆனாலும் சோம்பலினால் வாசித்த புத்தகங்கள் மிகக்குறைவு. ஜெயுடைய சில சிறுகதைகள், ஊமைச்செந்நாய் , உலோகம், பிறகு எஸ்.ராவுடைய சில சிறுகதைகள் மாத்திரமே வாசித்துள்ளேன்.

வாசிப்பின்பமும் தகவல்களும் மட்டுமே புனைவு வாசிப்பில் நான் அடைந்தது.

அபுனைவுகளிலும் நான் எடுத்த சில நூல்களைத் தவிர எதையும் முடித்ததில்லை.

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இதே கதைதான். இந்தச் சோம்பலை முறிப்பதற்கே ஓர் அறைகூவலாக வலைப்பதிவைத் தொடங்குகிறேன்.

சிவ சங்கரன் சோமாஸ்கந்தன்.

Comments

  1. நல்ல வாசகன் என்பதை வரையறுக்கவில்லை என்பதால் இக்கட்டுரை முழுமை அடையவில்லை.

    வாசிப்பின் படிநிலைகளை எளிய வற்றிலிருந்து ஆரம்பித்து அடுக்குவதென்றால் அவை:-
    1. தகவல்களை நினைவில் ஏற்றிக்கொள்வது. In other words :- "Just understanding the text".

    2. வாசிப்பின்பத்தை மட்டும் நுகர்வது.

    3. புனைவு வாசிப்பு என்றால் சொற்களில் இருந்து புனைவுலகை கற்பனையில் மீட்டுருவாக்கி அதில் சஞ்சரிப்பது

    அபுனைவு என்றால் புத்தகத்திற்கு critical reading -ஐ அளிப்பது .

    4. குறியீடுகளையும் படிமங்களையும் கண்டுகொண்டு கற்பனையை மேலும் விஸ்தாரம் ஆக்கி , ஆழமான கேள்விகளை பேரனுபவங்களை நோக்கிச் செல்லுவது (புனைவுகளுக்கு மட்டுமே பொருந்தும்).

    நான்காவது படிநிலையை அடைவதே நல்ல வாசிப்பு என்று கருதுகிறேன்.

    பதிவில் கூறியதைப் போல நான் அடைந்தது முதல் இரு படிகளையே

    ReplyDelete

Post a Comment